கத்தி முனையில் வங்கி ஊழியர் குடும்பத்தினரிடம் ரூ.7 லட்சம் நகைகள் கொள்ளை திண்டிவனத்தில் முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்

திண்டிவனத்தில் கத்தி முனையில் வங்கி ஊழியர் குடும்பத்தினரிடம் ரூ.7 லட்சம் நகைகளை முகமூடி கும்பல் கொள்ளையடித்துச்சென்றது.

Update: 2021-10-29 15:27 GMT
 திண்டிவனம், 

முகமூடி கும்பல் 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அய்யந்தோப்பு காமராஜர் நகரை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 36). இவர், திண்டிவனத்தில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக உள்ளார். இவருடைய மனைவி சுபலட்சுமி. இவர், கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளார். இந்த தம்பதிக்கு சொர்ணலதா(17), மோனிஷா(11) ஆகிய 2 மகள்களும், சுஜித்(9) என்ற மகனும் உள்ளனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சக்திவேல் தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் முகமூடி அணிந்து கொண்டு 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டுக்கு வந்தது.

கத்தியை காட்டி மிரட்டல் 

பின்னர் அந்த கும்பல் இரும்பு கம்பியால், கதவு பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. இந்த சத்தம் கேட்டு சக்திவேல் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். அங்கு கம்பி, கத்திகளுடன் நின்றிருந்த முகமூடி கொள்ளையர்களை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். 
உடனே கொள்ளையர்கள், 5 பேரின் கழுத்திலும் கத்தியை வைத்து, சத்தமிட்டால் கொன்று விடுவதாக மிரட்டினார்கள். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 17 பவுன் நகைகள், 1½ கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். 

அறையில் வைத்து பூட்டிய கொள்ளையர்கள் 

பின்னர் சக்திவேல் குடும்பத்தினரை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து கதவை பூட்டிவிட்டு, அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். 
இதனை தொடர்ந்து சக்திவேல் குடும்பத்தினர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கதவை திறந்து 5 பேரையும் மீட்டனர். அதிகாலையில் தங்களது வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தை கூறி சக்திவேல் குடும்பத்தினர் கதறினர். 

ரூ.7 லட்சம் நகைகள் கொள்ளை 

இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) இளங்கோவன் மற்றும் ரோஷனை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. 
மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளையும், அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களையும் சேகரித்தனர். 

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு 

இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது, கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்டபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.  இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து மூகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்