டேன்டீ தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை

குன்னூரில் டேன்டீ தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

Update: 2021-10-29 15:03 GMT
குன்னூர்

குன்னூரில் டேன்டீ தொழிலாளர்கள் போனஸ் பேச்சுவார்த்தை நடந்தது.

20 சதவீத போனஸ்

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம்(டேன்டீ) நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி டேன்டீ நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பேச்சுவார்த்தை

இது தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று குன்னூரில் உள்ள டேன்டீ தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு டேன்டீ மேலாண்மை இயக்குனர் சீனிவாச ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் எல்.பி.எப்., ஏ.டி.பி. தோட்ட தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை தொழிற்சங்கம் போன்ற தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். ஆனால் 10 சதவீத போனஸ் மட்டுமே வழங்க அனுமதி உள்ளது என்று டேன்டீ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் உங்கள் கோரிக்கையான 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்பதை கடிதம் மூலம் எடுதி கொடுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதுகுறித்து முடிவு எடுப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்