திபு, சதீசன் உள்பட 7 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக திபு, சதீசன் உள்பட 7 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து 26-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
ஊட்டி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக திபு, சதீசன் உள்பட 7 பேர் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை. தொடர்ந்து 26-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017 அன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே வழக்கு தொடர்பாக சயான், விபத்தில் இறந்த கனகராஜின்(ஜெயலலிதா கார் டிரைவர்) அண்ணன் தனபாலிடம் திடீரென போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் முழு விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரடியாக சிலரிடம் விசாரித்தார்.
26-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்தநிலையில் ஊட்டி கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீனில் உள்ள சயான், உதயகுமார் ஆகிய 2 பேர் ஆஜராகினர். குன்னூர் சிறையில் இருந்து மனோஜை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.
விசாரணையின்போது மீதமுள்ள 7 பேர் ஆஜராகாதது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதி ஏற்று கொண்டார். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜஹான்(சிறப்பு), ஆனந்த் ஆகியோர் ஆஜராகி முழு விசாரணை முடியாததால் கூடுதலாக கால அவகாசம் தேவை என்று நீதிபதியியிடம் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
ஜாமீன் மனு
வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு, காவல்துறை தரப்பில் 2-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். அன்றைய தினம் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும்.
பின்னர் சிறப்பு வக்கீல் ஷாஜஹான் நிருபர்களிடம் கூறியதாவது:- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்த மேல் புலன் விசாரணை முக்கியமான கட்டத்தில் உள்ளது. இதுவரை சாட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் என 42 பேருக்கும் மேல் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
யாராக இருந்தாலும் கைது
அதன் அடிப்படையில் மின்னணு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. செல்போன் பரிமாற்றங்களை கண்டறிவதில் காலதாமதம், கடினமான சூழ்நிலை உள்ளது. ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருந்தால் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை எடுக்கப்படும். தடயங்களை அழித்ததாக தனபால், ரமேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்படுகிறது.
அவர்களுக்கு, வழக்கு தொடர்பான கூட்டுச்சதியில் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தி கூட்டுச்சதி வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கனகராஜின் உறவினரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி
கோடநாடு வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், அவரது நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த 25-ந் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி ஊட்டி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று கூடலூர் கிளை சிறையில் இருந்து ரமேஷை போலீசார் அழைத்து வந்து, ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா, இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு ரமேஷை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி பல்வேறு முக்கிய தகவல்கள் மற்றும் ஆதாரங்களை திரட்டுகின்றனர். வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் செல்போன் பதிவுகளை அழித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.