சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
கடலூர்,
சிறுமி பலாத்காரம்
பண்ருட்டி எழுமேடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 58). தொழிலாளி. இவர் கடந்த 28.5.2019 அன்று அந்த பகுதியில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த 11 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தனியாக அழைத்தார். பின்னர் அந்த சிறுமியை தீக்குச்சியை பற்ற வைத்து சுட்டு மிரட்டினார். தொடர்ந்து அந்த சிறுமியை தனது வீட்டுக்கு கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி தாக்கினார். இது பற்றி அறிந்த சிறுமியின் தாய் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரிமுத்துவை கைது செய்தனர்.
20 ஆண்டு சிறை தண்டனை
இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், மாரிமுத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் நல வாழ்வு நிதியில் இருந்து 30 நாட்களுக்குள் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாச்செல்வி ஆஜராகி வாதாடினார்.