விவசாய நிலபகுதிகளில் மழைமானிகள் வைக்க கோரிக்கை
விவசாய நிலபகுதிகளில் மழைமானிகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
விவசாய நிலபகுதிகளில் மழைமானிகள் வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நீர் ஆதாரம்
ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரே நீர் ஆதாரம் வைகை தண்ணீரும், வடகிழக்கு பருவமழையும் தான். இதில் வைகை தண்ணீர் வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்யும் காலங்களில் அதிக தண்ணீர் சேர்ந்தால்தான் கேட்காமலேயே திறந்துவிடப்படும். இந்த சமயங்களில் ராமநாதபுரம் மாவட ்டத்திலும் நல்ல மழை பெய்வதால் வைகையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலந்துவிடுகிறது.
இதனால் வறட்சியும், வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு விவசாயம் அழிந்து வருவதால் பல பகுதிகளில் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று விட்டதோடு விளை நிலங்களை விலைநிலங்களாக மாற்றி விட்டனர்.
அசாதாரண நிலை
இந்த அசாதாரண நிலைக்கு மற்றொரு காரணமாக மாவட்டத்தின் மழை அளவு கணக்கீடும் இருந்து வருகிறது. மாவட்டத்தில் பெய்யும் மழை அளவினை கணக்கிட 16 இடங்களில் மழைமானிகள் வைக்கப்பட்டு அளவிடப்பட்டு வருகின்றன. இந்த மழைமானிகள் பலஆண்டு காலத்திற்கு முன்னர் அப்போதைய கால நிலைக்கேற்ப வைக்கப்பட்டவை ஆகும். இந்த மழைமானிகள் உள்ள பகுதிகள் விவசாய நிலங்கள் இல்லாத பகுதிகளாகவே இன்றளவும் இருந்து வருகின்றன. குறிப்பாக மாவட்டத்தில் அதிகஅளவு மழை பெய்யும் தீர்த்தாண்டதானம், வட்டாணம் பகுதிகள் விவசாய நிலங்களே இல்லாத பகுதிகளாகும்.
அதேபோல, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், வாலிநோக்கம், பள்ளமோர்குளம் ஆகிய பகுதிகளில் விவசாய நிலப்பரப்பு என்பது அறவே இல்லாத இடமாக கடல்பகுதியாகவே உள்ளது. இந்த பகுதிகளில்தான் ஆண்டுதோறும் அதிகஅளவில் மழை பெய்கிறது. ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், வாலிநோக்கம் உள்ளிட்ட இடங்களில் பெய்யும் மழை அனைத்தும் கடலில்தான் பெய்கிறது. இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை.
வறட்சி
விவசாய நிலங்கள் இல்லாத பகுதிகளில் பெய்யும் மழை அளவினை கணக்கில் கொண்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த மழை அளவு வெளியிடப்படுகிறது. இதனை வைத்து பார்க்கும்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியைவிட அதிகஅளவில் மழை பெய்துள்ளது என்று கணக்கில் கொள்ளப்பட்டு வறட்சி என்பது கணக்கில் கொள்ளப் படாமலேயே போய்விடுகிறது.
இதனால் விவசாய பாதிப்பிற்கான இழப்பீடு மட்டுமின்றி வறட்சி பாதிப்பு என்பதே இந்த மாவட்டத்தில் போராடி பெரும் நிலையிலேயே இன்றளவும் உள்ளது. இந்த நிலையால் ஆண்டுதோறும் விவசாயிகள் அதிகஅளவில் பாதிக்கப்பட்டு சொல்ல முடியாத அவதி அடைந்து வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் மாவட்டத்தில் உள்ள 16 இடங்களில் மழைமானிகளில் சில வேலை செய்வதில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மழைமானிகளை உடனடியாக ஆய்வு செய்து அதன் செயல்பாட்டினை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கை
அதேநேரத்தில் விவசாய நிலங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள மழைமானிகளை அகற்றிவிட்டு விவசாய நிலங்கள் அதிகம் உள்ள பரமக்குடி, திருவாடானை, கமுதி, கடலாடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் பகுதிகளில் கூடுதல் இடங்களில் மழைமானிகளை அமைத்து சரியான மழை அளவினை கண்டறிய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.