நாம் தமிழர் கட்சி சுவரொட்டி விளம்பரங்களை தடுக்கக்கூடாது; போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில்குமார் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசிய தலைவர்களின் நினைவுநாளில் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுக்காக ஆண்டுதோறும் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் சுவரொட்டி விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த ஜூன் மாதத்துக்கு பின்னர் தலைநகர் சென்னையை அழகுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களை சுவரொட்டி ஒட்டவிடாமல் போலீஸ்துறை மூலமாக தடுப்பது, ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்தெறிந்தும் வருகின்றனர். சட்டத்துக்குட்பட்டு செயல்படும் நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு விளம்பரங்கள் மட்டும் தடுக்கப்படுகின்றன. எனவே நாம் தமிழர் கட்சியின் சட்டப்பூர்வ அரசியல் நடவடிக்கைகளுக்கும் மற்றும் விளம்பரங்களுக்கும் இடையூறு செய்யும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.