ஆதம்பாக்கம் பகுதியில் நகை கடைகளில் நூதன மோசடி; உறவினருடன் பெண் கைது
ஆதம்பாக்கம் பகுதியில் நகை கடைகளில் போலி நகைகளை கொடுத்து தங்க நகைகளை வாங்கி நூதன மோசடியில் ஈடுபட்ட பெண், அவரது உறவினருடன் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தகலாராம் சவுத்ரி (வயது 43). இவர், அதே பகுதியில் நகைகடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், தன்னிடம் உள்ள பழைய நகைகளை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக புதிய நகைகளை வாங்க வந்திருப்பதாக கூறி போலியான நகைகளை கொடுத்துவிட்டு 7 பவுன் அசல் தங்க நகைகளை வாங்கி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதேபோல் ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள ஜதேந்தர்குமார் (51) என்பவரது நகை கடைக்கு சென்ற அதே பெண், நகைகளை வாங்குவதுபோல் பார்த்து விட்டு, பின்னர் எதையும் வாங்காமல் சென்றுவிட்டார். அவர் சென்றபிறகு நகைகளை சரிபார்த்தபோது 1½ பவுன் கம்மலை அந்த பெண் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணின் உருவத்தை வைத்து அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள அனைத்து நகை கடை உரிமையாளர்களின் ‘வாட்ஸ்அப்’ எண்ணுக்கும் அந்த பெண்ணின் புகைப்படத்தை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் உள்ளகரம் ஆயில் மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள நகை கடையில் மீண்டும் அதே பெண், ஆண் ஒருவருடன் வந்திருப்பதை கண்ட நகை கடை உரிமையாளர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் விரைந்து சென்று பெண் உள்பட 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மனைவி ராதா (35), அவரது உறவினரான சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் (33) என தெரியவந்தது.
இவர்களுடன் சாந்தி என்ற பெண்ணும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் நகை கடைகளுக்கு சென்று, பழைய நகைக்கு பதிலாக புதிய நகை வாங்க வேண்டும் என கூறுவார்கள். நகை கடைக்காரர் பரிசோதிக்கும் போது தங்க நகையை கொடுத்து விடுவார்கள். அது தங்கம் என உறுதி செய்த பிறகு நகைகடைக்காரர் அதற்கு பதிலாக புதிய நகைகளை கொடுக்கும்போது, தங்கள் பழைய நகைக்கு பதிலாக போலியான(கவரிங்) நகைகளை கடைக்காரரிடம் கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவ்வாறு இவர்கள் 3 பேரும் சேர்ந்து சென்னை மாம்பலம், ஆதம்பாக்கம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள நகை கடைகளில் நூதனமோசடி, திருட்டில் ஈடுபட்டதாக தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மோசடி செய்ய வைத்திருந்த போலி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.