குன்றி சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி

குன்றி சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி நடந்தது.

Update: 2021-10-28 21:05 GMT
ஈரோடு
குன்றி சிறப்பு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி நடந்தது.
சிறப்பு பயிற்சி பள்ளி
ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி அல்லது சேவை சார்ந்த தொழிலகங்களில் ஈடுபடும் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை மாவட்ட தடுப்புக்குழு மூலம் மீட்டு கல்வி மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகள் ஆகியோர் இந்த திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு 8-ம் வகுப்பு வரை வயதுக்கேற்ற அடிப்படை கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் முறைசார் பள்ளிகளில் தொடர் கல்வி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 15 மையங்கள் இயங்கி வருகிறது. தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த மையங்களில் குன்றி, கொங்காடை ஆகிய மலைப்பகுதிகள் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு கல்வித்துறையின் இலவச புத்தகம், குறிப்பேடு, புத்தகப்பை, காலணி ஆகியவையும் அரசின் மதிய உணவுத்திட்டத்தின் கீழ் முட்டையுடன் கூடிய மதிய உணவும் வழங்கப்படுகிறது. கடந்த 1½ ஆண்டாக கொரோனா நோய் பரவல் காரணமாக முறைசார் பள்ளிகளை போல இந்த மையங்களில் மதிய உணவுக்கு பதிலாக அரிசி, பருப்பு உள்ளிட்ட திட உணவுப் பொருட்களும், முட்டைகளும் மாணவ- மாணவி களுக்கு     வழங்கப்படுகிறது.
புத்துணர்வு பயிற்சி
இந்தநிலையில் நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 5-ம் வகுப்பு வரையான பள்ளிகள் திறக்கப்படுவது போல குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களும் தொடங்கி நடைபெற உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் தினமும் பாடவகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி சிறப்பு பயிற்சி மையங்களில் மாணவ- மாணவிகளுக்கு கல்வி குறித்த புத்துணர்வு பயிற்சி பயிற்றுனர்களால் நடத்தப்படுகிறது. 
சத்தியமங்கலம் வட்டாரம் குன்றி மலைப்பகுதியில் உள்ள குழந்தை தொழிலாளர் சிறப்பு பயிற்சி மையத்தில் புத்துணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் ஈரோடு தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் சி.சுப்பிரமணியன், குன்றி பகுதி மையங்களின் தொழில் கல்வி   பயிற்றுனர்கள் சி.சதீஷ், பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்தனர். இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்