சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி தீவிரம்

சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-10-28 20:46 GMT
சென்னிமலை
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகள் மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னிமலை  முருகன் கோவில்
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமாக 54 ஏக்கர் நிலம் பல்வேறு இடங்களில் உள்ளது. இதில் சில இடங்களில் உள்ள நிலங்கள் தனியார் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் அளவீடு செய்து அதன் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
நவீன கருவி மூலம்...
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை கடந்த சில நாட்களாக அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னிமலை முருகன் கோவில் செயல் அலுவலர் மு.ரமணி காந்தன் முன்னிலையில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஆர்.வி.அழகு ராஜன் தலைமையில் 3 சர்வேயர்கள் சாட்டிலைட் வசதியுடன் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவி மூலம் அளவீடு செய்து வருகிறார்கள்.
54 ஏக்கர்
மேலப்பாளையம் அரசு பள்ளிக்கு பின்புறம் 11 ஏக்கர், முகாசிபிடாரியூர் ஈஸ்வரன் கோவில் அருகில் 1.43 ஏக்கர், ஊத்துக்குளி ரோட்டில் 9.73 ஏக்கர்.
ஓட்டப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட 3 இடங்களில் உள்ள 4.82 ஏக்கர், 12.9 ஏக்கர், 15.2 ஏக்கர் என மொத்தம் சுமார் 54 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு அங்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என புதிதாக அடையாள கற்கள் நடப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்