முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் ஆன்மிக யாத்திரை சுற்றுலா திட்டம் - மத்திய மந்திரி எல்.முருகன் கோரிக்கை
முருகனின் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் ஆன்மிக யாத்திரை சுற்றுலா திட்டமாக உருவாக்க வேண்டும்.
பெங்களூரு:
ஆன்மிக யாத்திரை
தென் மாநில சுற்றுலாத்துறை மந்திரிகள் மாநாடு, பெங்களூருவில் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி ஜி.கிஷன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
பண்டைய காலத்தில் இருந்தே இந்தியா சுற்றுலாத்தலங்களை அதிகம் கொண்ட நாடாக திகழ்கிறது. அதே போன்று தமிழகமும், இயற்கை எழில் மிக்க மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், கோரமண்டல் கடற்கரை மற்றும் அரிய தாவரங்கள் விலங்கினங்களைக் கொண்ட வனப்பகுதிகளும் பெரும் அளவில் உள்ளன. இவை தவிர, வரலாற்று மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களும் ஏராளம் உள்ளன.
தமிழகத்தில் கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம், செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சை அரண்மனை, துறைமுக நகரான பூம்புகார், திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மகால் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன.
அதேபோல சுற்றுலா- ஆன்மிக தலங்களும் அதிகம் உள்ளன. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களை இணைத்து ஆன்மிக யாத்திரை சுற்றுலா திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
ஆன்மிக அடையாளம்
நமது நாடு ஆன்மிக சுற்றுலா தளங்களின் அடையாளமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்தியாவில் கேதர்நாத், பத்ரிநாத், காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுறம், புத்தகயா, மதுரை போன்ற ஆன்மிக சுற்றுலா தளங்கள் இருக்கின்றன.
இந்த சுற்றுலா தளங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். நமது நாட்டில் கல்வி சுற்றுலாவும் சிறப்பாக இருக்கிறது.
முன்னணி நாடாக உருவாகும்
சுற்றுலாவுக்கான உள்கட்டமைப்புக்கும், அதற்கான மேம்பாட்டுக்கும் மன்னர்களின் காலத்திலேயே ஆதரவு அளித்தனர். தற்போது சுற்றுலாத்துறையை மேம்படுத்த பிரதமர் மோடியும் மிகுந்த ஆர்வமாக இருந்து வருகிறார்கள். இந்தியாவை உலகஅளவில் சிறந்த சுற்றுலா நாடாக மாற்ற மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. உலகின் முன்னணி சுற்றுலா நாடாக இந்தியா உருவாகும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இந்த வாய்ப்புகள் உள்ளன.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.