தீ விபத்தில் 3 ஆட்டோ, மொபட் எரிந்து நாசம்
தீ விபத்தில் 3 ஆட்டோ, மொபட் எரிந்து நாசமாயின
திருச்சி
திருச்சி தில்லைநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சின்னசாமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). இவர், தென்னூர் மின்வாரிய அலுவலகம் எதிரே மூங்கில் கூடை மற்றும் ஏணிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மணிகண்டன் வீட்டுக்கு சென்று விட்டார். அன்று நள்ளிரவு மூங்கில் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக பரவியதில் அருகில் நின்ற 2 சரக்கு ஆட்டோ, ஒரு பயணிகள் ஆட்டோ மற்றும் மணிகண்டனின் மொபட் ஆகியவை தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாரேனும் தீ வைத்து விட்டு தப்பி ஓடினரா?, அல்லது சிகரெட் துண்டை அணைக்காமல் வீசியதில் தீ விபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.