ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி தொழில் அதிபர் ரூ.10 கோடி மோசடி; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2021-10-28 20:26 GMT
ஈரோடு
ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தனர்.
ஏலச்சீட்டு
ஈரோடு சூளை சி.எஸ்.நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர், ஈரோடு கங்காபுரத்தில்  பல்வேறு சிறிய நிறுவனங்களை நடத்தி வந்தார். தென்னிந்திய நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு குழுவில் துணைச்செயலாளராகவும் இருந்து வந்தார். மேலும் இவர், ஈரோடு அசோகபுரம் மெயின்ரோட்டில் ஏலச்சீட்டு நிறுவனம் வைத்து, தினசரி வசூல், வார வசூல், மாத வசூல் என்ற பெயரில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரையில் ஏலச்சீட்டுகளை நடத்தி வந்தார்.
இவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் 250-க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி வந்தனர். ஏலச்சீட்டில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்கள் தான் பணம் செலுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக ஏலச்சீட்டு குலுக்கலில் பணம் எடுத்தவர்களுக்கு உரிய பணம் கொடுக்காமல் கால அவகாசம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று திடீரென ஏலச்சீட்டு அலுவலகம் பூட்டிக்கிடந்தது.
ரூ.10 கோடி மோசடி
நேற்று மதியம் வரை அலுவலகம் திறக்காததால் பணம் செலுத்தியவர்கள் சந்தேகமடைந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். அப்போது ஏலச்சீட்டு நடத்தி வந்த தொழில் அதிபரின் தொழில்கள் அனைத்தும் நஷ்டமடைந்து விட்டதால் தலைமறைவாகி விட்டதாகவும், அவரது செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து பணம் செலுத்தியவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக புகார் மனு கொடுத்தனர். 
பின்னர் அவர்கள் கூறும்போது, ‘கடந்த பல ஆண்டுகளாக தொழில் அதிபர் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இதில் 250-க்கும் மேற்பட்டோர் ரூ.10 கோடி வரை செலுத்தி உள்ளோம். அந்த பணத்தை அவர் மோசடி செய்து விட்டார்.  எனவே எங்கள் சீட்டு பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்’ என்றனர். 
இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்