தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-28 19:23 GMT
புதுக்கோட்டை
சாலையில் திரியும் கால்நடைகள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் திருச்சி- சிதம்பரம் சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கால்நடைகள் சாலையின் ஓரங்களில் படுத்துக்கொள்வதும், அங்குமிங்கும் அலைவதும், நடு ரோட்டில்  நின்றுகொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. மேலும் அந்த வழியாக அதிவேகத்தில் வரும் வாகனங்களால் கால்நடைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடைகளை சாலையில் உலா விடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஆறுமுகம், ஜெயங்கொண்டம், அரியலூர். 

கோவில் வளாகம் சுத்தம் செய்யப்படுமா? 
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், மேட்டுமருதூர் கிராமத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்லாண்டியம்மன் கோவில் எட்டு பட்டி கிராமத்திற்கும் சொந்தமான கோவில் ஆகும். இக்கோவிலுக்கு 29.8 சென்ட் நிலம் உள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டிற்கு ரூ.1,20,000 வரை குத்தகை வருமானம் வருகிறது. ஆனால் இந்த கோவிலின் சுற்றுவட்ட பாதை காடு போல் உள்ளது. இதனால் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் போகிறது. மேலும் கோவிலை சுற்றி காடுபோல் காட்சி அளிப்பதால் விஷ ஜந்துக்கள் அப்பகுதியில் நடமாட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரெங்கநாதன், மேட்டுமருதூர், கரூர்.

வேகத்தடை அமைக்க வேண்டும்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கொட்டையூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் பஸ் நிறுத்தம் இருப்பது தெரியாமல் வேகமாக செல்வதினால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு சிலர் காயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் சாலையை கடக்க பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மணிவண்ணன், துறையூர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
புதுக்கோட்டை மாவட்டம்,  சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து, மேலவிடுதி கிராமம் ஆதிதிராவிடர் காலனியில்  பல வருடங்களாக சாலை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஜெயக்குமார், மேலவிடுதி, புதுக்கோட்டை. 

வரத்து வாரிகள் ஆக்கிரமிப்பு 
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், ஆலவயல் ஊராட்சி ஆலங்கண்மாய், நாத்துக்கண்மாய், வேட்டைகாரன் ஊரணி ஆகிய மூன்று நீர்நிலை பகுதிகளின் வரத்துவாரிகள் தடுத்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மழைநீரை சேகரிக்க முடியாத நிலை உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 கோபால், ஆலவயல், புதுக்கோட்டை. 

சுகாதாரமற்ற கழிப்பறை 
கரூர் பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச பொதுக்கழிப்பறை சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. மேலும் கழிப்பறையில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கரூர். 

உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்படுமா? 
பெரம்பலூரில் தாலுகா அலுவலகம் முதல் எரிவாயு தகன மயான வளாகம் வரை ஜமாலியா நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பிலும், ஆத்தூர் சாலையில் தனியார் பெட்ரோல் பங்குகள் எதிரே உள்ள அம்மன் நகர் வரை பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இரவு நேரத்தில் இப்பகுதிகள் மிகவும் இருட்டான நிலையில் உள்ளன. மேலும் பெரம்பலூரில் இருந்து ஆத்தூருக்கு செல்லும் சாலையிலும் எதிர் திசையில் பெரம்பலூர் நகருக்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகன டிரைவர்களின் வசதிக்காக பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சாலை நோக்கிலும் எதிரே பெரம்பலூருக்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகன டிரைவர்களின் வசதிக்காக தாலுகா அலுவலகம் மயானம் வரை சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் தெருவிளக்குகளை நகராட்சி நிர்வாகம் அமைக்க வேண்டும். முஸ்லிம் மயானம் (கபர்ஸ்தான்) மற்றும் எரிவாயு தகன வளாகம் ஆகிய 2 இடங்களிலும் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
இதய துல்லா, மதரசா சாலை, பெரம்பலூர்.

நாய்களால் ரெயில் பயணிகள் அச்சம் 
திருச்சி ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் முதல் நடைமேடை உள்பட சில நடைமேடைகளில் நாய்கள் சுற்றித்திரிவதினால் ரெயில் பயணிகள் பெரிதும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். மேலும் நடைமேடையில் நாய்களின் கழிவுகள் கிடப்பதினால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சந்தியாகு, ஸ்ரீரங்கம், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், காட்டூர் கோகுல் நகர் 5வது தெருவில் உள்ள சாலை மண்சாலையாக உள்ளதால் தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் இந்த சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஹரிசேஷன், காட்டூர், திருச்சி. 

பன்றிகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி,பொன்மலை, மலையடிவாரம் 36-வது, வார்டுக்குட்பட்ட சகாயமாதா கோவில் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிவதினால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பன்றிகள் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை கிளறுவதினால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பொன்மலை, திருச்சி. 

பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் 
திருச்சி மாவட்டம், துறையூரிலிருந்து சிங்களாந்தபுரம் தெற்கியூர்க்கு பஸ் வசதி இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பலர் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சத்யா, துறையூர், திருச்சி. 

வீணாகும் குடிநீர் 
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு வ.உ.சி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு,  24 மணி நேரமும் தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதுடன் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரிய உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வ.உ.சி.தெரு, திருச்சி. 

வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படுமா?
தீபாவளி பண்டிகையையொட்டி  பொதுமக்கள் அனைவரும் திருச்சி பெரியக்கடைவீதியில்  பொருட்கள் வாங்குவார்கள். அதேபோன்று திருச்சி தில்லைநகர் மற்றும் சாஸ்திரி சாலையிலும் பெரும்பாலான துணி கடைகள் மற்றும் ஷோரூம்கள் உள்ளன. மக்களும் எப்போதும்  இரு சாலைகளிலும் அதிகம் கூடுகின்றனர். ஆனால் பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் சாலையின் இரு பக்கங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். நிறுத்தப்படும்  பெரும்பாலான வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிகை எடுத்து தீபாவளியையொட்டி வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நவமணிவேல்,  திருச்சி.

மேலும் செய்திகள்