கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 6 பேர் கைது
கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
கரூர் மண்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 41). இவர் வாங்கல் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம ஆசாமிகள் ராமரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து உள்ளனர்.
இதுகுறித்து ராமர் கொடுத்த புகாரின் பேரில் வாங்கல் சப்- இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக சேலம் வாழப்பாடியை சேர்ந்த ரஞ்சித்குமார் (33), சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சுமன் (39), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த காஷ்மீர் (33) ஆகிய 3 பேரையும் கைது செய்தார்.
கைது
இதேபோல் வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பாரதியார் தெருவை சேர்ந்த கண்ணன் (31), டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெங்கமேட்டை சேர்ந்த கவுதம் (30), கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையடுத்து வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தார்.
கரூர் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர் செல்வ நகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் செந்தில்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து சென்னை மாதவரத்தை சேர்ந்த குமார் (52), செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த ஏழுமலையை (30) கைது செய்தார்.
கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.