7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புதுக்கோட்டை:
சிறுமிக்கு பாலியல் தொல்லை
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடியை சேர்ந்தவர் யூசுப் (வயது 38). இவர், 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம், கட்டுமாவடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் ரூ.100-ஐ கொடுத்து அருகில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அந்த சிறுமிக்கு, யூசுப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
5 ஆண்டுகள் சிறை
இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அறந்தாங்கி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் யூசுப்பை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் இதுகுறித்து புதுக்கோட்டையில் உள்ள மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர்.சத்யா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக யூசுப்புக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண தொகையாக ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.