மாவட்டத்தில் திருடுபோன 31 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; ஒருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருடுபோன 31 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

Update: 2021-10-28 18:28 GMT
புதுக்கோட்டை:
திருட்டு
புதுக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருடு போவதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மேற்பார்வையில் டவுன் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், சந்திரசேகரன், பாலசுப்ரமணியன், ராஜகோபால் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.   
 இந்நிலையில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் இருந்த போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.
மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் 
அதைதொடர்ந்து அவரிடம் மேலும் விசாரணை செய்த போது அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிழக்கு பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 42) என்பதும், புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடியதை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனார் கோவில் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள், கொத்தமங்கலம் பகுதியில் இருந்து 20 மோட்டார் சைக்கிள்கள், மறமடக்கி பகுதியில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஆலங்காட்டில் 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 31 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்