கிருஷ்ணகிரி, அக்.29-
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பிரதமரின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 660 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் மேலாளர், தன்னிச்சையாக பணிக்கான ஆணைகள் வழங்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார் தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதரிடம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில், பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்படுவது உள்ளிட்ட அதிகாரங்கள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு உள்ளது. தீர்மானத்தின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இந்நிலையில், பயனாளிகளுக்கான பணிக்கான உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் தன்னிசையாக வழங்கி உள்ளார். எனவே வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள், அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்ட துணை தாசில்தார் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கி கையொப்பம் பெற வேண்டும். தற்போது பணிக்கான ஆணைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் கொடுத்த புகார் குறித்து உயர் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.