முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-ந் தேதி வேலூர் வருகை. இலங்கை அகதிகளுக்கு வீடு கட்டும் திட்டத்ைத தொடங்கி வைக்கிறார்
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.;
வேலூர்
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
அமைச்சர்கள் ஆய்வு
வேலூரை அடுத்த மேல்மொணவூரில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதையொட்டி வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் விழாவிற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த பணியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விழாவிற்காக அங்கு செய்யப்பட்டு வரும் அனைத்து ஏற்பாடுகள் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் 2 அமைச்சர்களும், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு சென்று அங்கு வசிக்கும் மக்களிடம் குறைகள் கேட்டறிந்தனர். பின்னர் விழாவின் போது வழங்கப்படும் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினர். ஆய்வின்போது ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் கமிஷனர் ஜெசிந்தா லாசரஸ், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடியிருப்புகள்
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை வேலூரில் வருகிற 3-ந் தேதி நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் 10 நாட்களுக்குள் இந்த திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பார்கள். குடியிருப்பு கட்டுவதால் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைவார்கள்.
இலங்கை அகதிகளின் குழந்தைகளின் கல்விக்காக கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 4 மடங்கும், சில இடங்களில் 10 மடங்கும் உதவிகள் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.