தர்மபுரி நகரில் 107 கண்காணிப்பு கேமராக்கள்
தர்மபுரி நகரில் 107 கண்காணிப்பு கேமராக்கள்
தர்மபுரி, அக்.29-
தர்மபுரி நகரில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க 107 கண்காணிப்பு கேமராக்களை சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஸ்வரி தொடங்கி வைத்தார்.
கண்காணிப்பு கேமராக்கள்
தர்மபுரி நகரில் குற்ற சம்பவங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், விதிமுறைகளை மீறும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கண்காணிக்கவும் டவுன் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி நகரில் 107 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் முதல் தர்மபுரி 4 ரோடு வரை, பஸ் நிலையம் சுற்றி உள்ள சாலைகள் மற்றும் குமாரசாமிப்பேட்டை பகுதிகளில் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தர்மபுரி 4 ரோடு முதல் ராமக்காள் ஏரி கரை வரை, பென்னாகரம் ரோடு, திருப்பத்தூர் ரோடு, மதிகோன்பாளையம், அன்னசாகரம் ரோடு, கடைவீதி, எஸ்.வி.ரோடு மற்றும் நகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகள் ஆகியவற்றில் பொதுமக்கள் பங்களிப்புடன் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது.
தொடக்க விழா
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தர்மபுரி நகரில் உள்ள கடைவீதிகளில் ஜவுளி, நகை கடைகள், இனிப்பு கடைகள் மற்றும் பட்டாசு கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் அதிகம் கூடுவார்கள்.
இந்த நேரத்தில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க தர்மபுரி நகரில் தற்போது அமைக்கப்பட்டுள்ள 107 கண்காணிப்பு கேமராக்களின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
டி.ஐ.ஜி. தொடங்கி வைத்தார்
விழாவிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வழங்கினார். தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை முன்னிலை வகித்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வரவேற்றார். இதில் சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி கலந்து கொண்டு 107 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி நகரில் குற்ற சம்பவங்களை கண்காணிக்க முதல் கட்டமாக 107 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி.கூறினார்.