ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
போடி அருகே, ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலியானார். குடும்பத்தினர் கண் எதிரே இந்த துயர சம்பவம் அரங்கேறியது.
போடி:
குடும்பத்துடன் சுற்றுலா
சென்னையை அடுத்த அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி பாரதி.
இந்த தம்பதிக்கு விஷால் (வயது 16), கார்த்திக் (14) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில், விஷால் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கார்த்திக் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மகேஷ் தனது மனைவி, 2 மகன்களுடன் தேனி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு சென்று இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை பார்த்து ரசித்தனர். பின்னர் நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கணிக்கு சென்றனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
இதைத்தொடர்ந்து போடி வடக்கு மலை பகுதியில் சிரைக்காடு அருகே, பெரியாத்து கோம்பை ஆற்றுக்கு சென்று அனைவரும் குளித்தனர். அப்போது ஆற்றில் உள்ள சுழலில் சிக்கிய விஷால், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஷாலின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். குடும்பத்தினர் கண்ணெதிரே பிளஸ்-2 மாணவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.