முல்லைப்பெரியாற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

சிறை தண்டனைக்கு பயந்து, முல்லைப்பெரியாற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-28 16:38 GMT
உத்தமபாளையம்:

 
சிறை தண்டனைக்கு பயந்து...

தேனி மாவட்டம் கம்பம் கம்பராய பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 59). கூலித்தொழிலாளி. இவர் மீது, உத்தமபாளையம் கோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 

இந்த வழக்கில் தனக்கு 10 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்று பயந்து, மிகுந்த மன வேதனையில் ஜீவானந்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறைக்கு செல்வதற்கு பதிலாக தற்கொலை செய்து கொள்ளலாம் என அவர் முடிவு செய்தார். 

இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, கடைக்கு செல்வதாக கூறி ஜீவானந்தம் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. 

 மருந்து கடைக்குள் கடிதம்

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் அவருடைய மகன் ஸ்டாலின் ராஜா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தத்தை தேடி வந்தனர். 

இந்தநிலையில் அதே பகுதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் ஒரு கடிதம் கிடந்தது. அந்த கடிதத்தை ஜீவானந்தம் எழுதி இருந்தார். 

அதில், தன் மீதான மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆதாரம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு சிறை தண்டனை நிச்சயம் கிடைத்து விடும். சிறைக்கு செல்வதை விட தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

  ஆற்றில் குதித்து தற்கொலை

இதற்கிடையே காணாமல் போன ஜீவானந்தத்தை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்று பாலம் அருகே  அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கரையில் ஒதுங்கி கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர், சமீபத்தில் கம்பத்தில் மாயமான ஜீவானந்தம் என்று தெரியவந்தது. 

சிறை தண்டனைக்கு பயந்த அவர், முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--------

மேலும் செய்திகள்