நாட்டாமங்கலம் ஏரி கால்வாயில் உடைப்பு. பூ செடிகள் தண்ணீரில் மூழ்கியது

பொய்கை அருகே நாட்டாமங்கலம் ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கத்தரி மற்றும் பூ செடிகள் தண்ணீரில் மூழ்கியது.

Update: 2021-10-28 16:31 GMT
அணைக்கட்டு
 
பொய்கை அருகே நாட்டாமங்கலம் ஏரி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கத்தரி மற்றும் பூ செடிகள் தண்ணீரில் மூழ்கியது.

ஏரி கால்வாயில் உடைப்பு

அணைக்கட்டு தாலுகா பொய்கையை அடுத்துள்ள நாட்டாமங்கலம் ஏரிக்கு கடந்த 5 நாட்களுக்கு முன்பு மோர்தானா கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் ஏரி கால்வாயில் குறைந்த அளவே நீர் வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பாலாற்றுப் படுகையிலிருந்து அதிக அளவில் நீர் செல்வதற்கு கால்வாயில் நீரைத் திருப்பி விட்டனர்.

கால்வாயில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் பலவீனமான இடத்தில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டது. ஆங்காங்கே விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைத்தனர். பொய்கை அருகே சுமார் 10 மீட்டர் தூரத்திற்கு கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் பொய்கை ஊராட்சி வெள்ளக்காடாக மாறியது. வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

பூ செடிகள் மூழ்கியது

10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கத்தரி மற்றும் முல்லைப்பூ செடிகள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. தகவல் அறிந்ததும் கிராம மக்கள் நேற்று காலை முதல் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மணல் மூட்டைகளை அடுக்கி கரையை சீரமைத்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கரையை ஆய்வு செய்யாமலேயே  தண்ணீரை திருப்பி விட்டதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்