பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி தலைமறைவு
பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவி தலைமறைவானார்கள்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அடிஅண்ணாமலை பகுதியை சேர்ந்த அப்பாதுரை மற்றும் சிலர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
திருவண்ணாமலையை சேர்ந்த கணவன்-மனைவி இருவரும் எங்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர். மேலும் தீபாவளி சீட்டு என்று பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மோசடியில் ஈடுபட்ட கணவன்- மனைவி இருவரும் கடந்த 25-ந் தேதி முதல் தலைமறைவாகி விட்டனர். எனவே இந்த புகார் மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர்.