3 கடைகளுக்கு ‘சீல்' வைப்பு
தேனியில், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தேனி பழைய பஸ் நிலையம் மற்றும் மதுரை சாலையில் உள்ள கடைகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பழைய பஸ் நிலையத்தில் உள்ள 2 செல்போன் கடைகளில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை. அங்கு முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பலர் கூட்டமாக நின்றனர்.
இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் ‘சீல்' வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். உடனடியாக நகராட்சி அதிகாரிகள் அந்த 2 செல்போன் கடைகளுக்கும் ‘சீல்' வைத்தனர்.
இதேபோல் தேனியில், மதுரை சாலையில் செயல்படுகிற எல்.எம்.சி. சில்க்ஸ் என்ற ஜவுளிக்கடையிலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் மக்கள் கூட்டமாக இருந்தனர். அங்கு பணியாற்றும் ஊழியர்களும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றவில்லை.
இந்த கடையையும் ‘சீல்' வைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கு கடையில் இருந்து பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு அந்த கடைக்கும் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொருட்கள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டமாக உலா வருகின்றனர்.
எனவே, வணிக நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றாவிட்டால் இதேபோன்று ‘சீல்' வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி அணையாளர் சுப்பையா, சுகாதார அலுவலர் சுருளிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.