திண்டிவனம் ஆசிரியையிடம் நகை பறிப்பு
திண்டிவனம் ஆசிரியையிடம் நகையை பறித்துச்சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
திண்டிவனம் தாலுகா எறையானூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் லூயிஸ் எடிசன்ராஜ் மனைவி ஜூலிசுதா (வயது 44). இவர் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் மாலை பணி முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். எறையானூர் நேதாஜி நகர் பகுதியில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள், திடீரென ஜூலிசுதாவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
உடனே அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் இருவரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும்.
இதுகுறித்து ஜூலிசுதா, கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.