நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் முற்றுகை

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பா.ஜனதாவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2021-10-28 16:00 GMT
நெல்லை:
நெல்லை மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் நேற்று ஊர்வலம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியினர் வண்ணார்பேட்டை மேம்பாலம் பகுதியில் இருந்து ஊர்வலமாக அண்ணா சாலை, அறிவியல் மையம் ரோடு, கொக்கிரகுளம் மெயின் ரோடு வழியாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் முக்கிய நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு, போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்குவதாக அறிவித்து உள்ளது. இவர்களுக்கு மட்டும் இனிப்பு வழங்குவது ஏற்புடையதல்ல. 

கொரோனா காலத்தில் முழுமையாக பணிபுரிந்த முன்களப் பணியாளர்களான போலீசார், டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோரின் சேவை போற்றப்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்குவது போல் கொரோனா காலத்தில் தனது உயிரை பொருட்படுத்தாமல் நாட்டு மக்களின் உயிரை காப்பாற்றிய முன்களப்பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை இனிப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

இந்த போராட்டத்தில் துணைத்தலைவர்கள் லட்சுமணராஜா, டி.வி.சுரேஷ், சீதா குத்தாலிங்கம், சாந்தி ராகவன், பால்சாமி, செயலாளர்கள் குமார முருகேசன், பாலாஜி, மண்டல தலைவர் முருகப்பா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்