உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்கக்கூடாது
உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்கக்கூடாது என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்கக்கூடாது என்று கலெக்டர் அருண்தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வு
நாகை அருகே பரவை கிராமத்தில் உள்ள தனியார் உரம் விற்பனை மையங்களில் கலெக்டர் அருண்தம்புராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து உர இருப்பு பதிவேட்டில் உள்ள உர இருப்புக்கும், விற்பனை முனைய கருவியில் உள்ள இருப்புக்கும் வேறுபாடுகள் உள்ளதா? பட்டியல் படி உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் உள்ள சில்லரை உர விற்பனையாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், உர மூட்டைகளில் அச்சிடப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. உர உரிமத்தை புதுப்பிக்காமல் உரங்களை விற்கக்கூடாது. அனுமதி பெறப்படாத கிடங்குகளில் உரங்களை இருப்பு வைத்திருப்பது போன்றவை கண்டறியப்பட்டால் அவர்களது உர உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விலைப்பட்டியல் அடங்கிய பலகை
உர விற்பனையாளர்கள் தங்களது கடைகளில் விலைப்பட்டியல் அடங்கிய விவர பலகையை வாங்குபவர்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரம் வாங்க வரும் விவசாயிகளுக்கு பிற தேவையற்ற இடுபொருட்களை கட்டாயத்தின் பேரில் விற்பனை செய்யக்கூடாது. உர மூட்டைகளின் எடையை குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். விவசாயிகள் உரங்கள் மற்றும் அதன் தொடர்பாக புகார்களை 7397671300 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தெரிவிக்கலாம். தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) குமரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.