கிணத்துக்கடவு ரெயில் நிலையம் திறப்பு
கிணத்துக்கடவு ரெயில் நிலையம் திறப்பு
கிணத்துக்கடவு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திடீரென மூடப்பட்ட கிணத்துக்கடவு ரெயில் நிலையம் நேற்று திறக்கப்பட்டது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சோதனை ஓட்டம்
போத்தனூர் -பொள்ளாச்சி இடையே இருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி இடையே ரெயில்சேவை தொடங்கியது. இந்த வழித்தடத்தில் தினமும் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு, மதுரைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் இந்த வழித்தடம் ரெயில்வே பாதை மின்மயமாக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா காரணமாக ரெயில் போக்குவரத்தை ரெயில்வே நிர்வாகம் முற்றிலும் நிறுத்தியது. கொரோனா தாக்கம் குறைந்ததும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் கோவையிலிருந்து போத்தனூர்- பொள்ளாச்சி இடையே அமைக்கப்பட்ட மின்வழிதடத்தில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ரெயில்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்தார். முதல் கட்டமாக சரக்கு ரெயில் இயக்க அனுமதி வழங்கினார்.
கிணத்துக்கடவு ரெயில் நிலையம்
இந்தநிலையில் திடீரென கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த 4 ஊழியர்கள் பொள்ளாச்சி ரெயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து கிணத்துக்கடவு ரெயில் நிலையம் திடீரென மூடப்பட்டது. போத்தனூர் பொள்ளாச்சி இடையே பல நூறு கோடி ரூபாய் செலவில் ரெயில் தண்டவாள பணிகளை முடித்து ரெயில்கள் இயக்கப்படும் நேரத்தில் கிணத்துகடவு ரெயில் நிலையம் மூடப்பட்டதால். பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக திறப்பு
இதுகுறித்த செய்தி "தினத்தந்தி" நாளிதழில் வெளியானது. இதையடுத்து நேற்று உடனடியாக பாலக்காடு கோட்ட ரெயில்வே துறை அதிகாரிகள் ரெயில்வே அலுவலர்களிடம் கிணத்துக்கடவு ரெயில் நிலையத்தை மூடக்கூடாது. அங்கு 24 மணிநேரமும் ஆட்கள் பணியில் இருக்கவேண்டும் என உத்தரவிட்டனர். இதனைடுத்து நேற்று காலை ரெயில் நிலையம் மீண்டும் உடனடியாக திறக்கப்பட்டது. இதனால் பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மூடப்பட்ட கிணத்துக்கடவு ரெயில் நிலையம் குறித்து செய்தி வெளியிட்டு, ரெயில் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்து அதிகாரிகளுக்கும், தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.