தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு டி.ஏ.பி. உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் டிஏபி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்

Update: 2021-10-28 12:14 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுவதால் டி.ஏ.பி. உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
குறைதீர்க்கும் நாள்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் உள்ளிட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வழக்கம் போல் நடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 8 மாதமாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. அதே நேரத்தில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வெங்காயத்துக்கு பயிர்காப்பீடு
கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, விளாத்திகுளம், வேம்பார் ஆகிய பிர்க்காக்களில் வெங்காயம் பயிர் கடந்த ஆண்டு முழுமையாக அழிந்து விட்டது. ஆனால் பயிர் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதூர் கீழக்காலில் உள்ள 9-ம் எண் மடை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று அந்த பகுதியில் அரசு அமைத்த களம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனையும் மீட்க வேண்டும். 
ஓடை ஆக்கிரமிப்பு
அத்திரமப்பட்டி பிரதான வடிகால் வாய்க்கால் தண்ணீர் முள்ளக்காடு உப்பளம் வழியாக கடலில் சென்று கலக்கிறது. இந்த வடிகால் 30 அகலம் கொண்டது. இந்த வடிகால் உப்பளம் பகுதியில் 3 அடியாக சுருங்கி விட்டது. ஆகையால் தண்ணீர் ஊருக்குள் வரும் சூழல் உள்ளது. ஆகையால் வடிகால் வாய்க்காலை அகலப்படுத்த வேண்டும். உப்பாற்று ஓடை ஆக்கிரமிப்பை அகற்றி கரையை பலப்படுத்த வேண்டும்.
டி.ஏ.பி. உரம் தட்டுப்பாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு உள்ளது. டி.ஏ.பி. உரம் அடிஉரமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த உரம் தற்போது கிடைக்கவில்லை. போலி உரங்கள் விற்பனை, போலி பூச்சி மருந்துகள் விற்பனையும் அதிகரித்து உள்ளது. கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மூட்டை உரம் வாங்கினால், கூடுதலாக வேப்பம்புண்ணாக்கு உள்ளிட்ட பல உரங்களை வாங்க நிர்பந்திக்கின்றனர். இதனால் எங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரித்து, இழப்பை சந்திக்கும் நிலை உருவாகி வருகிறது. விவசாயிகள், உரக்கடைகளில் கடனுக்கு உரம் பெற்று விவசாயம் செய்யும் நிலை உள்ளது. இதனால் கடைக்காரர்கள் சொல்வதை விவசாயிகள் மீற முடியவில்லை. பெரிய நிறுவனங்கள் மூலம் இயற்கை விவசாயம் என்று பல உரங்கள் விவசாயிகள் மீது திணிக்கப்படுகிறது. 
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு
காற்றாலை நிறுவனங்கள் பல இடங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளனர். அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குருமலை பகுதியில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் வரும் நிலை உள்ளது. இதனை தடுக்க வனத்துறையினர் மின்வேலி அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 லிட்டர் டீசல் மானியமாக வழங்க வேண்டும்.
பேய்க்குளம் மடை எண்9-ல் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதியம்புத்தூர் மலர்க்குளத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குளத்துக்கு சீராக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதூர் மேலக்காலை விரிவாக்கம் செய்தால், உடன்குடி, சாத்தான்குளம் யூனியன் பகுதிகளுக்கு அதிக தண்ணீரை கொண்டு செல்ல முடியும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-
கொரோனா தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடியாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடப்பது மகிழ்ச்சி. இது எளிதாக கிடைக்கவில்லை. கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு சேர்க்க மிகவும் சிரமப்பட்டோம். விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் நடந்த முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 லட்சத்து 500 பேர் உள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் தூத்துக்குடி மாவட்டம் பின்தங்கி உள்ளது. ஒவ்வொரு வாரமும் 800 இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வருகிறோம்.
ெபாட்டாஷ் உரம்
பயிர் காப்பீடு தொகை விவசாயிகளுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் அரசு அறிவுறுத்தலின் பேரில் பெற்று இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. பொட்டாஷ் உரம் இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் பண்ணை குட்டைகளை அதிக அளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக பண்ணை குட்டைகள் வெட்டிய மாவட்டமாக தூத்துக்குடி திகழ வேண்டும். அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும். 
நெல்கொள்முதல் நிலையம்
முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, 3 ஆயிரத்து 240 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டன. இந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. 
ஆகையால் மாவட்டத்தில் 8 இடங்களில் நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. அதே போன்று குளங்கள் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன. அனைத்து வருவாய் கிராமங்களிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
வெங்காயம் பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உரக்கடைகளிலும் உரங்களின் இருப்பு, விலை விவரம் குறித்த பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் கடலுக்கு சென்று உள்ளது. அதே நேரத்தில் மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் அகலம் அதிகமாக இருந்தால், அதிக அளவில் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி இருக்க முடியும். இது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்