தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தகவல்

தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்

Update: 2021-10-28 11:43 GMT
கோவில்பட்டி:
தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 15 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் தெரிவித்தார். 
ஆலோசனை கூட்டம்
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எஸ்.சுரேஷ், துணைத்தலைவர் டி.கே.டி.ராஜூ, சங்க நிறுவனர் ராஜவேல், சாத்தூர் கிளை தலைவர் லட்சுமணன், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க இணைச் செயலாளர் வரதராஜன், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க துணைத்தலைவர் கோபால்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம் வரவேற்று பேசினார்.
15 சதவீதம் போனஸ்
பின்னர் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பரமசிவம் கூறியதாவது:-
தீப்பெட்டி மூலப்பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், 14 ஆண்டுகளுக்கு பின்னர் தீப்பெட்டி விலை ரூ.1-ல் இருந்து ரூ.2 ஆக உயர்த்தப்படுகிறது. தீப்பெட்டி தொழிலை நம்பி 6 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், 2 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் தீப்பெட்டி விலை உயர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். 
தீபாவளிக்கு பிறகு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும். மூலப்பொருட்கள் விலையேற்றம், தீப்பெட்டி தேக்கம் போன்ற பிரச்சினைகளை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தித்து வந்தாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண் தொழிலாளர்களுக்கு 12 சதவீதமும், ஆண் தொழிலாளர்களுக்கு 15 சதவீதமும் போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். 
வட்டி தள்ளுபடி
கூட்டத்தில், கொரோனா காலத்தை கருத்தில் கொண்டு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கியில் பெற்றுள்ள கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு தீப்பெட்டி மூலப்பொருட்களான குளோரைட், சல்பர் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு கலெக்டரின் தடை இல்லா சான்று பெறும் முறையை அரசு நீக்க வேண்டும். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கோவில்பட்டி, கழுகுமலை, சாத்தூர், விருதுநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப் ரத்தினம் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்