போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
40 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
முற்றுகை
தீபாவளி பண்டிகையையொட்டி டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீத போனஸ் வழங்கக்கோரி திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு டாஸ்மாக் மாவட்ட துணைத்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் நித்தியானந்தம், டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரன், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகி குமார் புஷ்பராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
கோரிக்கை மனு
இதில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு வருகிற தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 40 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
பின்னர் அவர்கள் இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கோரிக்கை மனுவை டாஸ்மாக் கிடங்கு மேலாளர் பாலாஜியிடம் அளித்தனர்.