காஞ்சீபுரம் பெரு நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
காஞ்சீபுரம் பெருநகராட்சி 51 வட்டங்களை உள்ளடக்கி நாள்தோறும் நகரின் அனைத்து பகுதிகளிலும் பல லட்சம் டன் எடையுள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தி வருகின்றனர்.;
இந்த பணிகளுக்காக பெருநகராட்சியில் 170 நிரந்தர பணியாளர்களும், 320 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த 320 தூய்மைப்பணியாளர்களும் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியமாக தற்போது வரை ரூ.9,500 மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் குடும்ப வாழ்க்கைக்கு பணம் போதுமானதாக இல்லை எனவும் தங்களது பிள்ளைகளின் கல்வி, பெற்றோர்களின் மருத்துவ செலவு என நிகழும் நிலையில் கொரோனா காலத்திலும் பணி விடுமுறை இன்றி தங்கள் பணியை திறம்பட செய்து பெருநகராட்சி நற்பெயரை ஏற்படுத்தினோம். ஆகவே ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் தங்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்கக்கோரி பரிந்துரை மேற்கொள்ள வேண்டுமென காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் லட்சுமி ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூறுகையில்:-
15 ஆண்டுகளாக மக்களின் நலனுக்காக சேவை புரிந்து வந்தோம், கொரோனா காலத்திலும் உயிரை பணயம் வைத்து பணி புரிந்து நற்பெயரை ஏற்படுத்தியிருந்த நிலையில் தங்களை கருணை உள்ளம் கொண்டு பணி நிரந்தரம் செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.