அவசரநிலை ஒத்திகை பயிற்சி முகாம்

அவசரநிலை ஒத்திகையையொட்டி மாவட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும், பயிற்சி முகாம்களை இந்த மையம் நடத்தி வருகிறது.

Update: 2021-10-28 08:17 GMT
கல்பாக்கம் அணுசக்தி மையம், அணுசக்தி துறையின் பல பிரிவுகளை கொண்டு இயங்கி வருகிறது. சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், வேக அணு உலை (கட்டுமானம்), பாபா அணு ஆராய்ச்சி மைய பிரிவுகள் போன்றவை இதில் அடக்கம். 

அணுசக்தி விதிமுறைகளின்படி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அவசரநிலை ஒத்திகையையொட்டி மாவட்ட அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும், பயிற்சி முகாம்களை இந்த மையம் நடத்தி வருகிறது. நவம்பர் மாதம் 11 -ந்தேதி நடைபெற இருக்கும் அவசர நிலை ஒத்திகை நிகழ்வையொட்டி அதையொட்டிய பயிற்சி முகாமை, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் நேற்று செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். 

சென்னை அணுமின் நிலைய இயக்குனர் பலராமமூர்த்தி அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்களை பற்றி எடுத்துரைத்தார். இதில் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. சாகித்தா பர்வீன், மதுராந்தகம் வருவாய் ஆர்.டி.ஓ. சரஸ்வதி தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, போக்குவரத்து துறை, உயர் அலுவலர்கள் மற்றும் அணுசக்தி மையத்தின் உயர் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்