40 சதவீத போனஸ் கோரி ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
சி.எம்.டி.ஏ. அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை எழும்பூரில் உள்ள ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ள சி.எம்.டி.ஏ. அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டி.தனசேகரன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து நா.பெரியசாமி கூறியதாவது:-
கொரோனா காலத்தில் ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் பல்வேறு சிரமங்களையும், நெருக்கடிகளையும் சந்தித்து பணியாற்றியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு வருவாயின் உயிர்நாடியாக விளங்கும் ‘டாஸ்மாக்’ பணியாளர்களுக்கு 8.33 சதவீத போனசும், 31.67 சதவீத கருணைத்தொகையும் சேர்த்து 40 சதவீத போனஸ் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் எங்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ‘போனஸ்’ மற்றும் கருணைத்தொகையை மறுபரிசீலனை செய்து உயர்த்திட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.