வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கலெக்டர் உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-28 02:27 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் வடகிழக்கு பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடந்தது. 

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள மழைநீர் கால்வாய்கள், கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏதும் ஏற்பட்டாதவாறு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் பேரிடர் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து 24 மணிநேரமும் பொது மக்களிடமிருந்து வரும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். குறிப்பாக ஆம்பூர், வாணியம்பாடி ஏரிகள், அணைகளுக்கு அருகேவுள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள 208 ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

தயார்நிலையில்...

பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களை உடனடியாக தூர்வாரி தண்ணீர் தடையில்லாமல் செல்ல பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ள அனைத்து அரசுத்துறை அலுவலர்களும்  தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணையின் உயரமான 26.24 அடி நிரம்பி முழு கொள்ளவை எட்டியுள்ளது. அதேபோல மாவட்டத்தில் மொத்தம் 285 ஏரிகளும், 269 குளம், குட்டைகளும் உள்ளன. இவற்றில் 24 ஏரி, குளம், குட்டைகள் முழுமையாக நிரம்பியுள்ளது. ஏரிகளுக்கு அருகே வாழும் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், சப்-கலெக்டர் (பொறுப்பு) பானு, வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் லோகநாதன் மற்றும் அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்