விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 698 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து-சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டத்தில் தகவல்
கடந்த 2 மாதத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 698 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
கடந்த 2 மாதத்தில் பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 698 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஆய்வுகூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா,
சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
அதிவேகத்தால் உயிரிழப்பு
விலை மதிப்பில்லாத மனித உயிரின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், வாகன ஓட்டிகளுக்கு தரமான சாலை போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவும், அதிக விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளில் உரிய எச்சரிக்கை பலகைகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திடும் வகையில் மாதந்தோறும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மழை காலங்களில் ஏற்காடு உள்ளிட்ட சாலைகளில் அதிகளவிலான கண்காணிப்பை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓட்டுனர் உரிமம் ரத்து
சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் மட்டும் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய 213 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கையும், அதிவேகமாக வாகனம் ஓட்டிய 59 நபர்களுக்கும், தவறான பாதையில் வாகனம் ஓட்டிய 31 நபர்களுக்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 13 நபர்கள் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 698 நபர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சாலை பாதுகாப்பின் விழிப்புணர்வை அதிகளவில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி பஸ்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் சாலையின் ஓரங்களில் வளரும் செடிகளை அவ்வப்போது ஊரக மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் சீர் செய்ய வேண்டும். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றி சாலை விபத்தில்லாத சேலம் மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.