மேட்டூர் அணை வேகமாக நிரம்புகிறது-106 அடியை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 106 அடியை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது.

Update: 2021-10-27 23:18 GMT
மேட்டூர்:
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 106 அடியை எட்டி கடல் போல் காட்சி அளிக்கிறது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதன்படி கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணை
இந்த தண்ணீர் தமிழக- கர்நாடக எல்லையை கடந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 251 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று வினாடிக்கு 37 ஆயிரத்து 162 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 102.79 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 105.14 அடியாக உயர்ந்தது. மதியம் மேலும் உயர்ந்து 106 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. இதே வேகத்தில் அணை நிரம்பினால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்