பட்டாவில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் நடக்கும் கிராமங்கள்-கலெக்டர் தகவல்
சேலம் மாவட்டத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்கள் நடக்கும் கிராமங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.;
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்கள் நடக்கும் கிராமங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்டாவில் திருத்தம்
அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. துணை கலெக்டர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் கணினி பட்டாவில் உள்ள புல எண் மற்றும் உட்பிரிவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இணையத்தில் திருத்தம் மேற்கொள்ளுதல், பரப்பு திருத்தம், பட்டாதாரரின் பெயர், தகப்பனார் பெயர் மற்றும் பாதுகாவலரின் பெயர் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ளுதல், உறவுமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளுதல், காலியாக உள்ள கலங்களில் உரிய பதிவு மேற்கொள்ளுதல் போன்றவை செய்து கொள்ளலாம்.
சிறப்பு முகாம்கள்
மேலும், நிலத்திற்கு உரிமையுடைய நில உரிமையாளர்களுக்கு பதிலாக அருகில் உள்ள நில உரிமையாளர்களின் பெயரினை பட்டாவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற பணிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் நிலஅளவை துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது.
இச்சிறப்பு முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்பட உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் இச்சிறப்பு முகாமானது நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி பல்வேறு கிராமங்களில் நடைபெற உள்ளது.
கிராமங்கள் விவரம்
அந்த வகையில் நாளை எருமாபாளையம் கிராமத்திற்கு எருமாபாளையம் ஊராட்சி கலையரங்களிலும், நெய்காரப்பட்டி கிராமத்திற்கு நெய்காரப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திலும், உத்தமசோழபுரம் கிராமத்திற்கு உத்தமசோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், செட்டிசாவடி கிராமத்திற்கு செட்டிசாவடி கிராம பஞ்சாயத்து அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
மேலும் சர்க்கார் வாழப்பாடி மற்றும் அக்ரஹாரம் வாழப்பாடி கிராமங்களுக்கு வாழப்பாடி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், ஏற்காடு டவுன் கிராமத்திற்கு ஏற்காடு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கிலும், கோனேரிப்பட்டி அக்ரஹாரம், கோனேரிப்பட்டி மற்றும் காவேரிப்பட்டி கிராமங்களுக்கு கோனேரிப்பட்டி அக்ரஹாரம், கல்வடங்கம், சமுதாய கூடத்திலும், பக்கநாடு மற்றும் ஆடையூர் கிராமங்களுக்கு பக்கநாடு சென்றாய பெருமாள் சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது.
காமலாபுரம்
அதேபோன்று காவேரிபுரம் கிராமத்திற்கு காவேரிபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கருங்கல்லூர் கிராமத்தில் அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திலும், பல்பாக்கி மற்றும் காமலாபுரம் கிராமங்களுக்கு காமலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், காடையாம்பட்டி தெற்கு கிராமத்திற்கு காடையாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திலும், அப்பமசமுத்திரம் கிராமத்திற்கு அப்பமசமுத்திரம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், கடம்பூர் கிராமத்திற்கு கடம்பூர் கிராம சேவை மையத்திலும், சின்னமசமுத்திரம் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் கிராமங்களுக்கு பெத்தநாயக்கன்பாளையம் ஈஸ்வரன் கோவில் அருகில் உள்ள சமுதாய கூடத்திலும், கிழக்குராஜாபாளையம் கிராமத்திற்கு கிழக்குராஜாபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாமினை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் பட்டாவில் திருத்தங்கள் மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.