ஆத்தூர் ஜெயிலில் கைதி மர்மசாவு-ஆம்புலன்சை மறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
ஆத்தூர் ஜெயிலில் கைதி ஜாமீனில் வெளியே வர இருந்தபோது மர்மமான முறையில் இறந்தார். கைதியின் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சை வழிமறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர்:
ஆத்தூர் ஜெயிலில் கைதி ஜாமீனில் வெளியே வர இருந்தபோது மர்மமான முறையில் இறந்தார். கைதியின் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சை வழிமறித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கைதி
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு அம்மைபிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மகன் கார்த்திக் (வயது34). இவருக்கு நீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அடிதடி, லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளில் கடந்த 17-ந் தேதி கார்த்திக் கைது செய்யப்பட்டு ஆத்தூர் கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்த அவருக்கு ஜாமீன் பெற அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர். அதன்படி அவருக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்தது. அன்று இரவுதான் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாவு
இதையடுத்து நேற்று காலையில் கார்த்திக் ஜாமீனில் வீட்டுக்கு செல்வதற்கு தயாராகி கொண்டிருந்தார். அவரை வரவேற்க மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் தயாராக இருந்தனர். கார்த்திக்கும், மனைவி, பிள்ளைகளை பார்க்க போகும் மகிழ்ச்சியில் இருந்தார்.
திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாக அங்கிருந்த அதிகாரிகளிடம், கார்த்திக் கூறியுள்ளார். உடனே அவர்கள் கார்த்திக்கை போலீஸ் பாதுகாப்புடன் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.
மனைவி கதறல்
தகவல் அறிந்த கார்த்திக்கின் மனைவி நீலா மற்றும் பிள்ளைகள், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். கார்த்திக் உடலை பார்த்து மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதனர். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
ஜாமீனில் வெளியே வர இருந்த நிலையில் கார்த்திக் இறந்ததால் அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கருதினர். இதனால் கார்த்திக் உடல் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆம்புலன்சு முன்பு போராட்டம்
ஆம்புலன்சு இரவு 7 மணி அளவில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது அங்கு திடீரென திரண்ட கார்த்திக்கின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்சைவழிமறித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் முன்பு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உறவினர்கள் போலீசாரை கண்டித்தும், கார்த்திக்கின் சாவில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நீதி கிடைக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கார்த்திக் இறப்பு குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருவதாகவும், உங்களுடைய கோரிக்கையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் சமாதானமடைந்த அவர்கள் ஆம்புலன்சை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர். இதையடுத்து கார்த்திக்கின் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த சாலை மறியலினால் சுமார் ¾ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இன்று (வியாழக்கிழமை) கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.