சேலத்தில் பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2021-10-27 22:23 GMT
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளி விஜி உள்பட 20-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பழனிசாமி, விஜி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை பரிசீலித்து பழனிசாமி, விஜி ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பரிமளா. இவரை கடந்த சில நாட்களுக்கு ரேஷன் அரிசி கடத்தியது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுபோன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து பரிமளாவை கள்ளச்சந்தைகாரர் என்ற பிரிவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்