பா.ஜனதா அலையில் காங்கிரஸ் காணாமல் போய் விடும் - பசவராஜ் பொம்மை பேச்சு
ஹனகல் தொகுதியில் 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், பா.ஜனதா அலையில் காங்கிரஸ் காணாமல் போய் விடும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பசவராஜ் பொம்மை பிரசாரம்
கர்நாடகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஹனகல் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று அவர், பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பின்னர் ஹனகல் அருகே காசனஹட்டி கிராமத்தில் திறந்த வாகனத்தில் நின்றபடி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வாக்காளர் மத்தியில் பேசியதாவது:-
காங்கிரஸ் காணாமல் போய்விடும்
ஹனகல் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெறுவது 100-க்கு நூறு சதவீதம் உறுதியாகும். இந்த தொகுதியில் பா.ஜனதா 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி எந்த மாதிரியான தந்திரங்கள், பிரசாரம் செய்தாலும், பா.ஜனதாவின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது. ஹனகல் தொகுதியில் பா.ஜனதா அலை வீசுகிறது. இந்த அலையில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். ஹனகல் தொகுதியின் வளர்ச்சிக்கு இதுவரை எந்த பணிகளும் செய்ததில்லை.
ஹனகல் தொகுதியை முன் மாதிரியாக மாற்றி காட்டப்படும். இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக சி.எம்.உதாசியும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவும் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளனர். என் மீதும், பா.ஜனதா மீதும் காங்கிரஸ் தலைவர்கள் எந்த விதமான குற்றச்சாட்டுகளை கூறினாலும், தொகுதி மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.