பணம் பட்டுவாடா செய்யும் ஆட்டத்தை பா.ஜனதா தொடங்கி விட்டது - குமாரசாமி
சிந்தகியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யாததால் பணம் பட்டுவாடா செய்யும் ஆட்டத்தை பா.ஜனதா தொடங்கி விட்டது என்று மந்திரி சோமண்ணாவுக்கு, குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
விஜயாப்புரா:
விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது;-
சித்தராமையா ஒதுக்கிய நிதி...
சிந்தகி தொகுதியில் எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் ஜனதாதளம் (எஸ்) கட்சி செய்யவில்லை என்று சித்தராமையா கூறி இருக்கிறார். கர்நாடகத்தில் முதல்-மந்திரியாக சித்தராமையா 5 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளார். அவரது ஆட்சி காலத்தில் சிந்தகி தொகுதியின் வளர்ச்சிக்காக சித்தராமையா என்ன செய்தார்?. இந்த தொகுதியின் வளர்ச்சிக்காக சித்தராமையா ஒதுக்கிய நிதி எவ்வளவு?.
கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக இருந்த போது தான் சிந்தகி தொகுதியின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கினேன். அதற்கு முன்பு ஆட்சியில் இருந்த சித்தராமையா எதுவுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினேன். இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சித்தராமையா வாய்க்கு வந்ததை பேசக்கூடாது.
பணம் பட்டுவாடா ஆட்டம்
இன்றுடன் (அதாவது நேற்று) சிந்தகி தொகுதியில் குமாரசாமியின் ஆட்டம் முடிந்து விட்டது, நாளை (அதாவது இன்று) முதல் பா.ஜனதாவின் ஆட்டம் தொடங்கும் என்று மந்திரி சோமண்ணா கூறியுள்ளார். சிந்தகி தொகுதியின் வளர்ச்சிக்காக பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபின்பு எடியூரப்பாவும், பசவராஜ் பொம்மையும் எதுவும் செய்யவில்லை.
இந்த தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால், பணம் பட்டுவாடா செய்தால் தான் முடியும். அதனால் நாளை (இன்று) முதல் பணம் பட்டுவாடா செய்யும் ஆட்டத்தை பா.ஜனதா தொடங்கி விட்டது என்று மந்திரி சோமண்ணா சொல்லி இருக்கலாம்.
கனவு பலிக்காது
தொகுதியில் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட்டு மக்களிடம் பணம் தருவோம் என்று சொல்லி இருந்தால், சோமண்ணாவின் கருத்தை வரவேற்று இருப்பேன். சிந்தகி தொகுதியில் ஏற்கனவே பா.ஜனதா வெற்றி பெற்றுவிட்டதாக மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். சிந்தகியில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக ஈசுவரப்பா கனவு கண்டதால், அவ்வாறு சொல்லி இருப்பார். அவரது கனவு பலிக்காது. ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் வெற்றி பெறுவார்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.