புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை

துமகூரு அருகே புதுமண தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-10-27 21:27 GMT
பெங்களூரு:

புதுமண தம்பதி தற்கொலை

  துமகூரு மாவட்டம் ஒசபடாவனே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வித்யாநகரில் வசித்து வந்தவர் சாகர் (வயது 25). இவரது மனைவி ஆஷா (23). இந்த தம்பதிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது. சாகர், ஆஷா தம்பதியின் சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் ஆகும். சாகர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த நிலையில், தம்பதி வசித்த வீடு நேற்று முன்தினம் நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது.

  இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்கள். அப்போது சாகரும், ஆஷாவும் தூக்கில் பிணமாக தொங்கினார்கள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஒசபடாவனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

  போலீசார் விரைந்து வந்து வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் தூக்கில் தொங்கிய சாகர், ஆஷாவின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவா்கள் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

  2 பேருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்ததாகவும், சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும் அக்கம் பக்கத்தினர் கூறினார்கள்.

பெரும் சோகம்

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உறவினரிடம் விசாரித்து வருகின்றனர். திருமணமான சில மாதத்திலேயே புதுமண தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 செல்போன் எண்ணை எழுதி வைத்ததால் உறவினரிடம் விசாரணை

புதுமண தம்பதியான சாகரும், ஆஷாவும் தற்கொலை செய்வதற்கு முன்பு தாங்கள் வசித்து வந்த வீட்டின் சுவரில் உறவினர் ஒருவரின் செல்போன் எண்ணை எழுதி வைத்துள்ளனர். அந்த உறவினர் அவர்களுக்கு ஏதாவது தொல்லை கொடுத்து வந்தாரா? அதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா என்பது தெரியவில்லை. இதனால் போலீசார் அந்த உறவினரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்