தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-27 21:03 GMT
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு பகவதிபுரத்தில் உள்ள எப்.ஐ.11 மின் கம்பத்தின் மேல்பகுதி சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஞ்சித் சிங், சிவசுப்பிரமணியபுரம்.
தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டது
திருப்பதிசாரத்தில் இருந்து வீரநாராயணமங்கலம் செல்லும் சாலையில் தேரேகால்புதூர்ஆற்றின் கரையோரம் உள்ள தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து காணப்பட்டது. இதுபற்றி 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடுப்பு சுவர் இடிந்த இடத்தில் தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சாலையையும் சீரமைத்தனர். சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
பஸ் வசதி தேவை
விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்ட முளங்குழி, கொல்லஞ்சி போன்ற பகுதிகளில் இருந்து தக்கலை, நாகர்கோவிலுக்கு செல்ல முறையாக ேநரடி பஸ் வசதிகள் இல்லை. மார்த்தாண்டம் அல்லது கருங்கல் சென்று செல்ல வேண்டியுள்ளது. இதனால், கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன், நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே, கிராம மக்கள் நலன் கருதி புதுக்கடையில் இருந்து ஐரேணிபுரம், முளங்குழி, கொல்லஞ்சி, இடைவிளாகம், பள்ளியாடி, கோழிப்போர்விளை, தக்கலை வழியாக நாகர்கோவிலுக்கு புதிய வழிதடம் அமைத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 -எஸ்.விக்னேஸ்வரன் கொல்லஞ்சி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் இடலாகுடியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் பள்ளத்தில் இறங்கும்போது கட்டுப்பட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -என்.நாகராஜன், இடலாகுடி. 
வாகன ஓட்டிகள் அவதி
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி சந்திப்பில் சாலையோரம் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழை நேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். பல நாட்களாக தண்ணீர் வடியாமல் இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் மழைநீர் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                       -ஸ்ரீனிவாசன், ஈத்தாமொழி.
மழைநீர் ஓடை அமைக்கப்படுமா?
கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் குடியிருப்பு பகுதியில் உள்ள தெருவில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், மழைநேரங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மழைநீர் வடிக்கால் ஓடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
 -சுயம்ஜோதி, கலைஞர் குடியிருப்பு.

மேலும் செய்திகள்