குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2021-10-27 20:17 GMT
நெல்லை:
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். குறைந்த சம்பளம் வாங்கும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 4 ஆண்டுகள் ஆகியும் 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்கவில்லை. அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் பரமசிவன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குமாரவேலு, முன்னாள் மாவட்ட தலைவர் விநாயக சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொருளாளர் மணி, துணைத்தலைவர் மாடசாமி, செயலாளர் மாரியப்பன் உள்பட குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்