புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2021-10-27 20:09 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வெள்ளைக்கோடு வரைய வேண்டும் 

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறையில் தஞ்சை-கும்பகோணம் சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்கப்பட்டாலும், அது தொடர்பான எச்சரிக்கை பலகை இல்லை. வேகத்தடையின் மீது வெள்ளைக்கோடுகளும் வரையப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரிவதில்லை. இதனால் இரு சக்கரவாகனங்களில் வருவோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விக்னேஷ்வரன், திருப்பாலைத்துறை. 

சாலையில் அபாய பள்ளம்

தஞ்சை பழைய கும்பகோணம் சாலை சின்னதெரு பகுதியில் சாலை உள்ளது. இந்த சாலையை பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் காணப்படும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி கழிவுநீர் போல் காட்சி அளிக்கிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சாலையில் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையில் காணப்படும் பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-சின்னத்தெரு பொதுமக்கள், தஞ்சாவூர். 

விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் அச்சம்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஜமால் உசேன் நகர் உள்ளது. இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையின் ஓரத்தில் வளர்ந்து காணப்படும் செடிகள், கருவேல மரங்கள் சாலையில் குறுக்கே படந்து காண்படுகிறது. இந்த பகுதி முழுவதும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் புகலிடமாக காணப்படுகிறது. இதனால் சாலையோரத்தில் உள்ள வீடுகளில் வசிப்போர் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் ஒரே நேரத்தில் எதிர், எதிரே வாகனங்கள் வரும் போது மிகவும் சிரமம் அடைகின்றனர். இதேபோல் ஜமால் உசேன் நகர் 4-வது, மற்றும் 5- வது தெருவுக்கும் இடையிலுள்ள குறுக்கு சாலையும் புதர் மண்டி காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் படர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆதிநெடுஞ்செழியன், தஞ்சாவூர்.

நாய்கள் தொல்லை

பட்டுக்கோட்டை நகரில் சாமு முதலி தெரு, மயில்பாளையம் தெரு, ராஜா மடம் வாய்க்கால் முத்துப்பேட்டை ரோடு ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் 15-க்கும் அதிகமான நாய்கள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. நாய்கள் சாலையின் குறுக்கே  செல்லும் போது மோட்டார் சைக்கிளில் செல்வோர் சிறு, சிறு, விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துகின்றன. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருக்களில் சுற்றித்திரியும் நாய் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
-ரவிச்சந்திரன், பொன்னவராயன்கோட்டை.


புதர் சூழ்ந்த குடிநீர் தொட்டி

தஞ்சை ஏ.ஒய்.ஏ. நாடார் சாலையில் மேல்லயன் பகுதியில் ஒரு குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில்தான் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டியின் அருகில் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் புகழிடமாகவும் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் அந்த தண்ணீர் தொட்டியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் தொட்டி அருகே வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-பிரதாப், மேல்லயன் பகுதி, தஞ்சாவூர்.

மேலும் செய்திகள்