கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; என்ஜினீயர் பலி
க.பரமத்தி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் பலியானார். மேலும், படுகாயம் அடைந்த 2 பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
க.பரமத்தி,
துக்க நிகழ்ச்சி
ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் அருகே உள்ள புளியங்காடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38), என்ஜினீயர். இவர் கரூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்கு தனது மனைவி ரேவதியுடன் (31) வந்தார்.
பின்னர் அவர் தனது மனைவி மற்றும் உறவினரான கோவை மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் பிரிவை சேர்ந்த துரைசாமி மனைவி இலக்கியாவுடன் (29) கரூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
என்ஜினீயர் பலி
க.பரமத்தி அருகே பவுத்திரம் வானவிழி அருகே கார் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த ரேவதி, இலக்கியா ஆகியோர் வலியால் துடித்தனர்.
இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
டிரைவர் கைது
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த க.பரமத்தி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காரில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மீட்டு கார்த்திக் தந்தை பழனிச்சாமியிடம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஒப்படைத்தார். இந்த விபத்து குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் சிதம்பரத்தை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.