85 அடியை தாண்டியது அமராவதி அணை; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
அமராவதி அணை 85 அடியை தாண்டியதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
க.பரமத்தி,
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இதன் மொத்த கொள்ளளவு 4,047 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக பயன்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருவதால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
இதேபோல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான தூவானம், பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 85.04 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 655 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து ஆற்றிற்கு 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் 3,604 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே ஆற்றில் திறக்கப்படும். எனவே கரையோரத்தில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.