நடப்பாண்டிலும் பயிர் அடங்கல் வழங்க வேண்டும்
நடப்பாண்டிலும் பயிர் அடங்கல் வழங்க வேண்டும் என தமிழ் விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
விருதுநகர்,
தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் நடப்புப் பருவத்தில் பயிர் சாகுபடி செய்துள்ளனர். இதில் வங்கிகளில் கடன் பெறவும், பயிர் காப்பீடு செய்யவும், பயிர் அடங்கல் அவசியமாக தேவைப்படுகிறது. மேலும் நில உரிமையாளர் இறந்த பின் பட்டாகூட்டு நிலையில் இருக்கும்போது வாரிசுகளுக்கு பிரித்து அடங்கல் தர அனுமதிக்க வேண்டும். தற்போதைய நிலையில் உடனடியாக பட்டா மாற்ற இயலாது. கடந்த ஆண்டு அடங்கல் வழங்கியது போல நடப்பாண்டிலும் பயிரடங்கல் வழங்கினால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படாது. ஆகையால் இந்த முறையை பின்பற்றினால் விவசாயிகளுக்கு சிரமம் இல்லை. மேலும் கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தில் பட்டாவில் உள்ள பயிருக்கு தான் அடங்கல் தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதாககூறப்படுகிறது. இதனால் குத்தகை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தற்போது பயிர் காப்பீடு செய்யும் நேரம் என்பதால் கடந்த ஆண்டு வழங்கியது போல இந்த ஆண்டும் அடங்கல் வழங்க விவசாயிகள் சார்பாக வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.