32 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
சிவகாசி அருகே மம்சாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 32 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.
சிவகாசி,
சிவகாசி அருகே மம்சாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 32 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார்.
பட்டா மாறுதல்
சிவகாசி தாலுகாவில் உள்ள மம்சாபுரம் கிராமத்தில் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இம்முகாமில் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 14 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 3 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைச் சான்றுகளையும் என மொத்தம் 32 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.
சிறப்பு முகாம்
அப்போது கலெக்டர் மேகநாத ரெட்டி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி, அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும், அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக, ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி மாவட்டத்திலுள்ள 10 தாலுக்காகளுக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களிலும் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 27.10.2021 முதல் 31.12.2021 வரை ஒவ்வொரு வாரம் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பயன்பெற வேண்டும்
எனவே இந்த சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முகாமில சிவகாசி சப்- கலெக்டர் பிரதிவிராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர் எஸ்.நாராயணன், சிவகாசி தாசில்தார் ராஜ்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.